Poem-Flowers

Subbu ·

கவிதைப் பூக்கள்

அவள் பார்வைகளை,
விருப்பம் என்று
மொழிபெயர்த்தது, நான்.
அதற்கு
அர்த்தமே இல்லை
என்று
சொல்லியது, அவள்!

பூ பூத்திருந்தது
"பிடிக்காமல் இல்லை"
என்ற வரிவரை.
"உங்கள் மேல்
அப்படி ஒன்றும்
அபிப்பிராயம் இல்லை"
என்ற வரியில்
நானும் வாடினேன்!

"விருப்பம் இல்லை" - என்ற
தீர்ப்பு கிடைத்தபிறகு,
"ஏன்?" என்று அவளிடம்
மறுபரிசீலனை செய்ய
நான் விரும்பவில்லை!

எவ்வளவு தூரம்
இருந்தாலும்
மனதில் பக்கத்தில் நின்றவள்
இன்று பக்கத்தில் இருந்தும்
வெகு தூரத்தில்!

கலைந்து போகும்
மேகங்களின் மீது
பொறாமை உண்டு
எதுவுமாக இல்லாமல் போக
என்னால் முடியவில்லை என்று!

தினமும்
நான் வேண்டிக்கொள்வது
ஒன்றுதான்
சிறிது நேரமாவது
என் மனம் என்னை பற்றி
நினைக்கவேண்டும் என்று!

நினைவுகளின் இடுக்குகளில்
தேடினேன்.
ஒரு விலாங்கு மீனை போல,
அவள் நினைவுகள் கூட
என் கையை விட்டு நழுவி
சிக்காமலே போனது!

இனி என்னை
கடக்கும் ஒவ்வொரு பெண்ணிலும்
உன் சாயலை தேடுவேன்!

ஈரமான இரவின் காற்றில்
வளரும் என் நினைவுச்செடி
இன்று ஒரு பூ வைத்திருந்தது
அதுவும் அவளுக்காக தான்!

அவள் நினைவுகள்
புதைந்த இடமெல்லாம்
எத்தனை எத்தனை
கவிதை பூக்கள்!

முதலில் அவள் பார்க்க
எழுதிய கவிதைகள்.
இன்று அனைவரும்
பார்க்கின்றனர்
அவளை தவிர!

தனியாக இருப்பதில் கூட
பல ரகங்கள் உண்டு.
நான் இப்போது விரும்புவது
அவள் நினைவுகள் இல்லாத
தனிமை!


A no — what it said, and how it felt — written over time.